Wednesday, July 16, 2014

ஒரு ஞாயிறு காலைபொழுது

காற்றாடி நின்று விட்டது.. இந்த புழுக்கத்திலும் ரசிக்கத் தோன்றுகிறது. எங்கிருந்தோ ஒரு குருவி கீச்சிடுகிறது. காகங்கள் கத்துகின்றன. எப்படித்தான் அவை தினம் சீக்கிரம் விழிக்கின்றனவோ ஆச்சர்யமாக இருக்கிறது.
பக்கத்து வீட்டு நாய் அதிசயமாய் குரைக்கின்றது.மின்சாரம் இல்லாதது அதற்கு மிக வருத்தம் போல..மல்லாக்க படுத்திருக்கிறேன் முதுகு முழுக்க வியர்த்து விட்டது...என்ன செய்வது.. எழுந்திருக்க மனமில்லை..புரண்டு படுக்கிறேன். பால்காரன் கூட வந்துவிட்டான் போல... அவன் சைக்கிள் மணி சத்தம் எங்கோ தூரத்தில் கேட்கிறது...இன்னும் கண் திறக்கவில்லை நான், எங்கோ போகின்ற இருசக்கர வண்டிச்சத்தங்கள் கேட்கிறது.. எங்குதான் செல்வார்களோ மக்கள் இவ்வளவு சீக்கிரம்? ஜன்னலை படுத்தபடியே திறந்துவிட்டேன்... விட்டு விட்டு லேசாக காற்றடிக்கிறது..இதமாகத்தான் இருக்கிறது. அதற்கு என் மேல் உள்ள  காதலும் கோபமும் அதன் வேகத்தில் தெரிகிறது. வியர்க்க வைத்து பின் இதமான காற்றடித்து என்னிடம் விளையாடிப் பார்க்கின்றது...மின்சாரம் இல்லாத நேரங்களில் தான் காற்றின் அருமையை அதன் காதலையும் உணர்கிறேன். தினமும் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டும். பக்கத்து வீட்டில் பால் குக்கர் கத்துகின்றது.. மனித படைப்புகளின் சத்தம் அவ்வளவு அழகாக இல்லை..அவைற்றின் சத்தங்களில் எந்த உணர்ச்சியும் என்னால் உணரமுடிவதில்லை என்பதனாலோ என்னவோ..இப்போது காகங்களுடன் ஒரு கிளி போட்டி போட்டு கத்துகிறது.தினமும் சீக்கிரம் முழிக்க வேண்டும்.. நன்றாகத்தான் இருக்கிறது கேட்பதற்கு. இப்போது கண் முழித்து விட்டேன்..  கடிகாரம் மணி ஆறு காட்டுகிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை அவன் ஊரில் இன்னும் மின்வெட்டு இல்லை போலும் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான் ஆனந்தமாய்.. பேப்பர் போடும் சிறுவன் மடித்து எறியும் தினசரி எதிர்த்த வீட்டு வாசலில் படாரென்று விழுகின்றது.. லேசாக சிரித்துக்கொண்டே போகிறான்..அவன் அவ்வளவு எத்தனிக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கையில் அந்த வீட்டு நாய் வெளியே வந்து அவனை பார்த்து முறைக்கின்றது.. அவன் செயலின் காரணமும் அந்த குறுநகையின் அர்த்தமும் அப்போது புரிகின்றது. சூரியன் முழித்து விட்டான்...வானம் சிவக்கின்றது கிழக்கே...அட காற்றாடி சுற்றுகிறது.. மின்சாரம் வந்துவட்டது..
தூக்கம் வரவில்லை கண்மூடி கவனிக்கிறேன் வேறென்ன கேட்கிறது என்று...இந்த ஞாயிற்றுக்கிழமை காலை வாரம் முழுக்க நினைவில் இருக்கும்..

No comments:

Post a Comment