Wednesday, December 17, 2014

இந்த மயக்கம் இன்னும் பலரைத் தாக்கும்

மாதக்கணக்கில் பூக்காத செண்பகம் பூத்திருக்கிறது யாருக்கும் தெரியாமல், அதன் காய்கள் கொத்து கொத்தாய் தென்படுகின்றன இப்போது.இந்த கண்ணாமூச்சி வேலை அதற்க்கு ஏனோ?

நன்றாக பூத்துக்கொண்டிருந்த செம்பருத்தி நாணத்தில் பூக்க மறந்து விட்டது போலும் பச்சைபசேலென வளர்ந்திருக்கிறது. ஓன்றிரெண்டு பூக்களை மட்டும் கண்ணில் காட்டுகின்றது. சங்கு புஷ்பம் பச்சை பசேலென தன் கொடிகளை பரப்பிகொண்டு சின்ன சின்ன நீல மலர்களை  அங்கும் இங்கும் பூத்து கொண்டு காற்றில் ஆடுகிறது.. 

மாமரம் காய்த்திருக்கிறது செழிப்பாய், தினம் ஒரு ஐம்பது குருவிகளை தன்பக்கம் சுண்டியிழுக்கின்றது..அணில்களுக்கு கொண்டாட்டம்தான் சொல்ல வேண்டியதில்லை. பழங்களை கொறிப்பதும், அப்படி கொறிக்கும்போது மரத்தில் இருந்து விழும் பழங்களை போட்டி போட்டு கொண்டு தரைக்கு ஓடி வந்து கூடி அமர்ந்து தின்பதும் அவற்றின் அன்றாட வேலையாகி விட்டது.மனிதர்களை கண்டவுடன் பயந்து ஒளிந்து கொள்வது போல் நடித்து விட்டு பின் மெல்ல இறங்கி ஒரு கெஞ்சும் தொனியில் வந்து மிச்சம் வைத்ததை சாப்பிடுகின்றன.என் பார்வையில் பூனைகளை விட தந்திரம் படைத்தவை அணில்கள்தான். என்ன ஒரு நடிப்பு!

காக்கை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்தாயிற்று. அதன் சந்தோசம் கொள்ளவில்லை போலும்.. கத்தி கத்தியே ஊரை கூட்டுகிறது.

முருங்கைமரம் தன்  பூக்களை கடைசி மழையில் இழந்துவிட்டது. தப்பித்த மலர்களை ஏதோ புழுக்கள் தாக்க மரம் சோர்ந்து விட்டது என்றாலும் அந்த புழுக்களை தின்ன வரும் சிட்டுக்குருவிகள் ஆனந்தம் கொண்டு அங்கு இங்கும் அலைவது ஒரு அழகிய காட்சி.

மழை பெய்யும் நேரத்தில் நந்தியாவட்டை  பூக்களை உதிர்க்கின்றது. நட்டு வைத்த நித்தியகல்யாணி கூட பூத்தாயிற்று... நலிந்துகிடந்த செவ்வந்தி வெள்ளந்தியாய் பூத்திருக்கிறது. 

மொத்தத்தில் மழை மயக்கி வைத்திருக்கிறது என்னையும் சேர்த்து. மேகம் கருத்திருக்கின்றது. மழை பெய்யும் இன்றும்... இந்த மயக்கம் இன்னும் பலரை தாக்கும்....

Tuesday, September 30, 2014

மழை பெய்த மறுநாள் காலை!

அதிகாலை ஆறரை மணி ஆகின்றது. தினம் நான் நடக்கும் அதே பாதை புதிதாய் தெரிகிறது இன்று. சுடுகாட்டைத் தாண்டி நடந்து கொண்டிருக்கிறேன்.சவம் ஒன்றும் சிதையில் இல்லை. அப்படி இருப்பதை எட்டத்தில் இருந்து கண்டுவிட்டால் அதன் பின் அந்த பக்கம் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. முடிவுகள் என்றும் என்னை ஈர்ப்பதுண்டு. இவைகளை முடிவுகள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை எனெனில் இவை பலர் வாழ்க்கைபக்கங்களை பாதியினில் குழப்பிவிட்டுச் செல்லும் அரைசூத்திரங்கள் என்பதனாலோ என்னவோ.. சீமைக்கருவைகள் முடிந்து தோட்டக்காடு ஆரம்பித்து விட்டது."என்னப்பா உன் இடத்துல மேக்கால முயல் மேயுது போல.. சம்சாரி எப்புடி நீ சுரக்கா விக்கப்போற.. வலைய கிலைய விரிக்கிறது.. இல்லனா கொஞ்சம் திம்மட்ட தூவுறது" என்ற குரல் கேட்கிறது. விவசாயியை பார்த்து பரிதாபப்பட்டாலும் என் கண்ணில் இன்றுவரை அங்கு தென்படாத முயல்களின் மேல் எனக்கு வந்த பரிதாபம அதனை விஞ்சிக் கொண்டு தொண்டையை அடைக்கின்றது. "அதுங்க என்னப்பண்ணும் ரேஷன் கடையில அரிசி இலவசமா கொடுத்தா அதுங்களும் தோட்டக்காட்டுப்பக்கம் வராது நம்ம பயலுவள போல.விளையிததுதான் விளையும்"என்று சிரித்த பட்டிக்காட்டானின் பேச்சில் பொருளாதாரம் மிகத்தெளிவா விளங்கியது.சூரியன் இன்னும் கண் முழிக்கவில்லை. மரங்கள் அனைத்தும் குளுமையில் கிறங்கிக் கிடக்கின்றன. தோட்டக்காடு முடிந்து பொட்டல்வெளிக்கு வந்து விட்டேன் கண்ணுக்கெட்டும் தூரம் தெரியும் இடமெல்லாம் இரவில் பெய்த மழை நனைத்திருக்கின்றது. கல்லும் மணலுக்கும் போக மீதமான மழை நீர் சின்னச்சின்ன வரிகளாகத் தொடங்கி ஓடையில் ஒன்று சேர்ந்து சலசலவென தெளிவாக ஒடுவது என்னவொரு அழகாக இருக்கிறது. தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மிதமிச்சமானதை வாரி இறைப்பதில் இயற்கையை மிஞ்ச ஆளில்லை. குளத்தில் சாய்ந்து கிடக்கும் கருவேல மரங்களில் பூத்த அந்த மஞ்சள் மலர்கள் கண்ணை கவர்கின்றன.குளத்தங்கரை பனைமரங்கள் ஒரு பக்கம் நனைந்து மறுபக்கம் மழையில் நனையாததால் வாடைக்காற்றின் வேகத்தில் வருத்தத்துடன் மெல்ல அசைகின்றன. காலியாக என்னை தினமும் தாண்டிச்செல்லும அந்த அரசுப்பேருந்து குளத்தங்கரையில் ஏற முடியாமல் நின்று விட்டது. நடத்துநரும் ஓட்டுநரும் இறங்கி குனிந்து எதையோ சரி செய்கிறார்கள். அதற்கும் அந்த அழகான இடத்தை தாண்டி செல்ல மனமில்லை போலும். குளத்தின் மடையை தாண்டி மறு கரையில் ஏறி விட்டேன். பக்கத்து மாந்தோப்பினுள் உழுது போட்டிருக்கிறார்கள். மாமரங்கள் பூத்துவிட்டென. சில காய்கள் வேப்பம்பழம் அளவுக்கு அந்தபூக்களின் நடுவே தென் படுகின்றன. பூக்களை பூச்சிகள் கடிக்காதிருக்க மருந்து தெளிக்கிறார்கள்.நாற்றம் நாசியை புரட்டுகிறது. வேகமாக நடக்கிறேன் இப்போது தெளிவான காற்று சுவாசத்தினை சுத்தப்டுத்துகின்றது. மனதுக்கு பிடிக்காதவைகளை விட்டு மனம் மட்டும் ஏன் இவ்வாறு வேகமாக விலகிச் செல்வதில்லை என்பதன் காரணம் புரியவில்லை. இன்னும் என்னென்வோ எண்ணங்கள் கவலை கொடுப்பதற்காக வரிசையில் நிற்கின்றன.பாதையின் குறுக்கே பாம்பொன்று வேகமாக ஓடுகிறது. பயத்தில் அந்த இடத்திலேயே நிற்கிறேன் நான் அது வயக்காட்டுக்ககுள் வேகமாக புகுந்து விட்டது.பயந்தது யாரென்பது எனக்கு புரியவில்லை. முன்னேறுகிறேன் நான் அந்த பாதையில் மழை பெய்த மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன்.

Monday, September 8, 2014

உன் தரம் என்றும் நிரந்தரம்

மனிதனால்
படபடவென ஒடிக்கப்பட்டு
சரசரவென இழுக்கப்பட்டு
கரகரவென அறுக்கப்பட்டு
மளமளவென தேய்க்கப்பட்டு
கொடுமைகளை அனுபவித்தும்
தன் உறுதி இழக்காத மரப்பொருட்கள்
என்னை பார்த்து சொல்லும் பாடம்
உலகமே உன்னை வாட்டினாலும்
உன்னை நீ மாற்றாதே
உன் தரம் என்றும் நிரந்தரம்!

Saturday, September 6, 2014

புதிதாய் பிறக்கிறேன் அவ்வப்போது..

ஏழு பிறவிகள் உண்டா என்பது என் அறிவுக்கு எட்டாத ஒன்று. எனவே இல்லை என்பது என் பதில் இன்றுவரை. இந்த நாத்திகம்  ஒருபக்கம் இருந்தாலும் நாம் புதிதாய் பிறக்கிறோம் என்பது இன்று முதல் என் எண்ணங்களில் ஒன்றாக இருக்கும். அது எழு முறையன்று எழுபது முறைகளாகவும் இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம் அது அவரவர் அனுபவங்களையும் அவர்களின் தன்மையும் பொருத்தது என தோன்றுகிறது.வாழ்வின் சில தருணங்கள் நம்மை புதிதாய் பிறக்க வழிவகுக்கின்றன.சில நியதிகள் மற்றும் நம்பிக்கைகளின் என்னுள் அன்று தன் இறுதி நாளை சந்திக்கின்றது..சில கோட்பாடுகள் சுக்குநூறாக உடைகின்றன மேலும் சில வளைந்து நெளிந்து புது உருவெடுக்கின்றன.சில நம்பிக்கைகள் புதிதாய் தோன்றுகின்றன பல சிந்தனைகளின் வேகமும் திசைகளும் முழுமையாக புதிய பரிமாணங்களை  தன்னுடையதாயாக்கிக் கொள்கின்றன.சில மாற்றங்களில் சில இழப்புகளில் சில பிறப்புகளில் தினமும் புதிது புதிதாய் பிறக்கறேன் அவ்வப்போது..

Wednesday, July 30, 2014

Decision

Shattered glasses all around
Thoughts running up and down
Walls everywhere as I move around
Breathing heavily and I slow down

No other plans to chalk
Had a single path to walk
You had chosen only to mock
I don't care about your flock

There is a lot to give back
I choose not to look back
With a  baggage on my back
I walk out with a confidence you lack

Monday, July 21, 2014

சில தவறுகள் சிரிக்கும்படியாய்!

அதே தவறு மீண்டும்.. என் மனம் என்னை பார்த்துச் சிரிக்கிறது..மறுபடியும்!!
"அப்பா! இங்கே வாங்களேன்." என்று கத்துகிறேன். முதலில் தம்பி வருகிறான்  எப்பொழுதும் போல். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது முற்றிலும் பொய். என் பிரச்சனைகளில் அவன் இல்லாத நேரங்கள் இல்லை நான் வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம்.
பல நாள் கழித்து நான் இன்று வீட்டில் உள்ளதால் அவன் ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகம். கண்ணுக்குத் அவன் தென்படவில்லை என்ற போதிலும் சிலரின் இருப்பினை உணரமுடிகிறது. கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கிறான் சத்தம் இல்லாமல் சிரிக்கிறான். "அப்பா!" மறுபடியும் என் கூக்குரல். "என்ன ஆச்சு? புதுத்துணிய போடலயா?" என்ற கேள்வியுடன் வந்த அப்பாவுக்கு  என்னை கண்டவுடன் புரிந்தது.
"பட்டன கழட்டாம ஏன் தலை வழியா சட்டைய போடற? " இது அப்பா.
அப்பா பட்டனை கழட்டியதும் சட்டை தலைக்குள் நுழைந்தது.
"அவன் என்னைக்கு அப்பா நீங்க சொல்றத கேப்பான். முடிய பாருங்க. நேத்துதான் போனான் முடி வெட்ட." சமயம் பார்த்து உண்மை என்கிற தோனியில் போட்டுக்கொடுப்பதில் இவனை மிஞ்ச ஆள் கிடையாது. எனக்கு பழகிப்போய்விட்டது இவன் சொல்லும் சொல்லுக்கு அப்பா ஆடுவது.
"சரி கிளம்பு சித்தப்பா வீட்டுக்கு போய்ட்டுவரலாம். ஸ்வீட்டை எடு" என்று பேச்சை மாற்றுகிறேன்.
சில தவறுகள் சிரிக்கும் படியாய்!

Thursday, July 17, 2014

மழை பெய்யும் இன்று

லேசாக எட்டிப்பார்க்கிறது தூரல்... மழை பெய்யக்கூடும் என்பதனால் குடையுடன் கிளம்புகிறேன் இன்று. வேண்டும் வேண்டாம் என நான் முடிவெடுக்க முடியாத சிலவற்றில் குடைக்கு என்றும் முதலிடம் உண்டு.. அடைமழை பெய்யும் நேரங்களில் அதன் இருப்பு தரும் தைரியம் அபரிதமானது... இந்த  ஈரக்காற்றும் குளிர்ந்த நீரும் உடலில் பட்டதும் மூளையை எப்படி மழுங்கடிக்க செய்யகின்றது என்பது புரியவில்லை..
முந்தைய நாள் இருமல், பிடிக்காத இஞ்சிக்கசாயம்,பாலுடன் கசக்கும் தூதுவளை இலை,தொண்டையில் எரிச்சல் கொடுக்கும் வெற்றிலை என அனைத்தும் மறந்துபோகும் அது என் தேகம் பட்ட நொடியில்...இத்தனையும் மனதிலிருந்தாலும் கடும் காய்ச்சல் கூட இருந்தாலும் ஒரு விரலாவது மழையில் நனைத்தால் தான் தூக்கம் வரும் அன்று...அப்படி ஆசைபடுகிறது மனது..
சாலை ஓரத்தில் மழை பெய்யும் நேரத்தில் நடக்கையில், என் எதிரே பெய்த மழையில் நனைந்து போய் நடந்து வருபவர்களை காண்கையில் மனம் ஆசையில் ஆர்பரிக்கின்றது.கொஞ்சம் நனைய வேண்டும் என நினைக்கிறேன்...இரவில் பெய்த மழை காலையையும் சாலையையும் கண்ணுக்கழகாக மாற்றியிருக்கின்றது.. இன்றும் மழை பெய்யும்.. இன்னும் அழகாக மாறும்..

Wednesday, July 16, 2014

புரிதலும் குழப்பமும்...

சில நேரங்களில் மனம் அலைபாய்கையில் நாம் புரிந்ததாகக்கொண்ட பலவற்றை  உண்மையில் நாம் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை என்ற நிலையில் நம் புரிதலில் நமக்கே ஒரு இனம் புரியாத குழப்பம் ஏற்படுகின்றது.. இதனை தெளிவு என்பதா இல்லை குழப்பம் என்பதா என்ற எண்ணம் கூட குளறுபடியானது... இதனை புரிதலின் குழப்பம் அல்லது குழப்பத்தின் புரிதல் என்ற இரண்டில் ஒன்றாகக்கொள்ளலாம்.. ஆனால் இரண்டில் எதனை முடிவாகக்கொள்ளலாம் என்பது முடிவற்ற குழப்பமாகவே இருக்கிறது...

ஒரு ஞாயிறு காலைபொழுது

காற்றாடி நின்று விட்டது.. இந்த புழுக்கத்திலும் ரசிக்கத் தோன்றுகிறது. எங்கிருந்தோ ஒரு குருவி கீச்சிடுகிறது. காகங்கள் கத்துகின்றன. எப்படித்தான் அவை தினம் சீக்கிரம் விழிக்கின்றனவோ ஆச்சர்யமாக இருக்கிறது.
பக்கத்து வீட்டு நாய் அதிசயமாய் குரைக்கின்றது.மின்சாரம் இல்லாதது அதற்கு மிக வருத்தம் போல..மல்லாக்க படுத்திருக்கிறேன் முதுகு முழுக்க வியர்த்து விட்டது...என்ன செய்வது.. எழுந்திருக்க மனமில்லை..புரண்டு படுக்கிறேன். பால்காரன் கூட வந்துவிட்டான் போல... அவன் சைக்கிள் மணி சத்தம் எங்கோ தூரத்தில் கேட்கிறது...இன்னும் கண் திறக்கவில்லை நான், எங்கோ போகின்ற இருசக்கர வண்டிச்சத்தங்கள் கேட்கிறது.. எங்குதான் செல்வார்களோ மக்கள் இவ்வளவு சீக்கிரம்? ஜன்னலை படுத்தபடியே திறந்துவிட்டேன்... விட்டு விட்டு லேசாக காற்றடிக்கிறது..இதமாகத்தான் இருக்கிறது. அதற்கு என் மேல் உள்ள  காதலும் கோபமும் அதன் வேகத்தில் தெரிகிறது. வியர்க்க வைத்து பின் இதமான காற்றடித்து என்னிடம் விளையாடிப் பார்க்கின்றது...மின்சாரம் இல்லாத நேரங்களில் தான் காற்றின் அருமையை அதன் காதலையும் உணர்கிறேன். தினமும் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டும். பக்கத்து வீட்டில் பால் குக்கர் கத்துகின்றது.. மனித படைப்புகளின் சத்தம் அவ்வளவு அழகாக இல்லை..அவைற்றின் சத்தங்களில் எந்த உணர்ச்சியும் என்னால் உணரமுடிவதில்லை என்பதனாலோ என்னவோ..இப்போது காகங்களுடன் ஒரு கிளி போட்டி போட்டு கத்துகிறது.தினமும் சீக்கிரம் முழிக்க வேண்டும்.. நன்றாகத்தான் இருக்கிறது கேட்பதற்கு. இப்போது கண் முழித்து விட்டேன்..  கடிகாரம் மணி ஆறு காட்டுகிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை அவன் ஊரில் இன்னும் மின்வெட்டு இல்லை போலும் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான் ஆனந்தமாய்.. பேப்பர் போடும் சிறுவன் மடித்து எறியும் தினசரி எதிர்த்த வீட்டு வாசலில் படாரென்று விழுகின்றது.. லேசாக சிரித்துக்கொண்டே போகிறான்..அவன் அவ்வளவு எத்தனிக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கையில் அந்த வீட்டு நாய் வெளியே வந்து அவனை பார்த்து முறைக்கின்றது.. அவன் செயலின் காரணமும் அந்த குறுநகையின் அர்த்தமும் அப்போது புரிகின்றது. சூரியன் முழித்து விட்டான்...வானம் சிவக்கின்றது கிழக்கே...அட காற்றாடி சுற்றுகிறது.. மின்சாரம் வந்துவட்டது..
தூக்கம் வரவில்லை கண்மூடி கவனிக்கிறேன் வேறென்ன கேட்கிறது என்று...இந்த ஞாயிற்றுக்கிழமை காலை வாரம் முழுக்க நினைவில் இருக்கும்..

Thursday, July 10, 2014

அது ஒரு புது இரவு!

பரிசாய் வந்த பாத்திர பண்டங்களில் இரண்டு ஒரே மாதிரி இருப்பவைகளை கணக்கு போட்டு கொண்டிருக்கும் அக்கா.. வாரம் முழுக்க ஆட்டம் போட்டு விட்டு இன்று அயர்ந்து தூங்கும் அக்கா பொண்ணு.. என்னவென்று தெரியமா என்றுஎள்ளி நகையாடும் பாட்டி..ஒரக்கண்ணில் பார்த்துவிட்டு கண்டும் காணாத மாதிரி அப்பா...சுண்ட வைத்த பாலை குடியென படுத்தும் அம்மா. என்ன ஓரவஞ்சனை அண்ணிக்கும் கொடுக்க வேண்டும் இது தங்கையின் பெண்ணியம். "எனக்கு!"இது அக்கா பையனின் பசி. இந்த  முழு டிராயர் வேண்டாம் வேஷ்டி உடுத்திக்கோ அனுசரனையாக இருக்கும் என்று காதைகடிக்கும் தாத்தா. கால் மேல் கால் போட்டுக்கொண்டு காணும் பொழுதெல்லாம் கண் சிமிட்டும் அத்தான்.
முதலிரவு முற்றிலும் புதியது!
- உடன் வேலை பார்க்கும் நண்பன்  தெலுங்கில் சொன்னது.

Saturday, March 22, 2014

உந்தன் வாசம்

இன்னும் கேட்கிறது உன் குரல்
எதிலும்  நிறைகிறது உன் முகம்
இருட்டிலும் தெரிகிறது உன் நிழல்
காற்றில் வருகிறது உன் வாசம்
இன்றும் என்றும் என் வாழ்வில்
வந்து போகும் அத்தனை மகிழ்ச்சியிலும்
உந்தன் வாசம் தினமும் வீசும்..

உண்மையில் நீ இல்லை

எண்ணம் ஒன்று சேர
கண்ணில் நீர் வழிய
மனதில் சஞ்சலத்துடன்
மருகி மன்றாட
உண்ண நினைவில்லாமல்
உறக்கம் உணராமல்
உந்தன் பெயரை நொடிக்கொருமுறை
உதடு சொல்ல
கண்ணுறங்காது காவல் காத்திருக்க
கண்ணிமைக்கும் பொழுதில்
கணநொடியில் வாழ்வை நீ
தட்டி பறிக்க
தவமிருந்தும் பயனில்லை
விழித்திருந்தும் விடையில்லை
உண்மையில் நீ இல்லை!

Friday, March 21, 2014

சிறகுகள் முளைக்கும்

முட்டையை எடுத்து மூடி வைத்து
குஞ்சு பொரித்ததும் மறைத்து காத்து
குழந்தை போல வளர்க்கலாம் கொஞ்சகாலம்
நித்தம் நித்தம் அது தானாய் வளரும்
கொஞ்சம் கொஞ்மாய் காரணம் படிக்கும்
கேள்வி கேட்டு தினம் நச்சரிக்கும்
கொஞ்ச காலம் தத்தளிக்கும்
காவலில் இருப்பதை கண்டுபிடிக்கும்
சின்ன சின்னதாய் சினமும் கொள்ளும்
செய்வதரியாது முரண்டு பிடிக்கும்
முட்டிமோதி அட ஆர்ப்பரிக்கும்
ஆசை கனவை அடைய நினைக்கும்
வாழ்க்கை பயனை காண நினைக்கும்
வண்ண வண்ணமாய் சிறகும் முளைக்கும்
வெடவெடவென விண்ணில் பறக்கும்
வானவில்லையும் வளைத்து ஒடிக்கும்..

Tuesday, February 18, 2014

கலிகாலம் கலிகாலம்!!!!

சீதையின் கதை சிந்திக்கப்பட வேண்டும்
கணவன் சொன்னால் கட்டையில் ஏற வேண்டும் என்பதை ஆரம்பித்தவள் அவள்
கண்ணகியின் கதை கண்டிக்கப்பட வேண்டும்
கணவன் பின்னால் கேள்வியின்றி நடக்க வேண்டும் என்பதை நியதியாக்கியவள் அவள்
சீதை கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும்
கண்ணகி கணவனை கண்டித்திருக்க வேண்டும்
எனினும் இன்று
சீதையின் கதை புராணம்
கண்ணகியின் கதை காவியம்
கலிகாலம் கலிகாலம்

Thursday, January 16, 2014

உலகின் முதல் தொடர்கதை

பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுறித்தான் என்பது சிறுகதை
அலை நீள சேலை அளித்து அனைவர்
முன் ஆடை களைய வைத்து
துருபதன் மகள் திக்குமுக்காட
திருதராட்டினன் சபையில்
நடந்ததுதான் உண்மையில்
உலகின் முதல் தொடர்கதை!