Wednesday, December 17, 2014

இந்த மயக்கம் இன்னும் பலரைத் தாக்கும்

மாதக்கணக்கில் பூக்காத செண்பகம் பூத்திருக்கிறது யாருக்கும் தெரியாமல், அதன் காய்கள் கொத்து கொத்தாய் தென்படுகின்றன இப்போது.இந்த கண்ணாமூச்சி வேலை அதற்க்கு ஏனோ?

நன்றாக பூத்துக்கொண்டிருந்த செம்பருத்தி நாணத்தில் பூக்க மறந்து விட்டது போலும் பச்சைபசேலென வளர்ந்திருக்கிறது. ஓன்றிரெண்டு பூக்களை மட்டும் கண்ணில் காட்டுகின்றது. சங்கு புஷ்பம் பச்சை பசேலென தன் கொடிகளை பரப்பிகொண்டு சின்ன சின்ன நீல மலர்களை  அங்கும் இங்கும் பூத்து கொண்டு காற்றில் ஆடுகிறது.. 

மாமரம் காய்த்திருக்கிறது செழிப்பாய், தினம் ஒரு ஐம்பது குருவிகளை தன்பக்கம் சுண்டியிழுக்கின்றது..அணில்களுக்கு கொண்டாட்டம்தான் சொல்ல வேண்டியதில்லை. பழங்களை கொறிப்பதும், அப்படி கொறிக்கும்போது மரத்தில் இருந்து விழும் பழங்களை போட்டி போட்டு கொண்டு தரைக்கு ஓடி வந்து கூடி அமர்ந்து தின்பதும் அவற்றின் அன்றாட வேலையாகி விட்டது.மனிதர்களை கண்டவுடன் பயந்து ஒளிந்து கொள்வது போல் நடித்து விட்டு பின் மெல்ல இறங்கி ஒரு கெஞ்சும் தொனியில் வந்து மிச்சம் வைத்ததை சாப்பிடுகின்றன.என் பார்வையில் பூனைகளை விட தந்திரம் படைத்தவை அணில்கள்தான். என்ன ஒரு நடிப்பு!

காக்கை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்தாயிற்று. அதன் சந்தோசம் கொள்ளவில்லை போலும்.. கத்தி கத்தியே ஊரை கூட்டுகிறது.

முருங்கைமரம் தன்  பூக்களை கடைசி மழையில் இழந்துவிட்டது. தப்பித்த மலர்களை ஏதோ புழுக்கள் தாக்க மரம் சோர்ந்து விட்டது என்றாலும் அந்த புழுக்களை தின்ன வரும் சிட்டுக்குருவிகள் ஆனந்தம் கொண்டு அங்கு இங்கும் அலைவது ஒரு அழகிய காட்சி.

மழை பெய்யும் நேரத்தில் நந்தியாவட்டை  பூக்களை உதிர்க்கின்றது. நட்டு வைத்த நித்தியகல்யாணி கூட பூத்தாயிற்று... நலிந்துகிடந்த செவ்வந்தி வெள்ளந்தியாய் பூத்திருக்கிறது. 

மொத்தத்தில் மழை மயக்கி வைத்திருக்கிறது என்னையும் சேர்த்து. மேகம் கருத்திருக்கின்றது. மழை பெய்யும் இன்றும்... இந்த மயக்கம் இன்னும் பலரை தாக்கும்....