Wednesday, July 30, 2014

Decision

Shattered glasses all around
Thoughts running up and down
Walls everywhere as I move around
Breathing heavily and I slow down

No other plans to chalk
Had a single path to walk
You had chosen only to mock
I don't care about your flock

There is a lot to give back
I choose not to look back
With a  baggage on my back
I walk out with a confidence you lack

Monday, July 21, 2014

சில தவறுகள் சிரிக்கும்படியாய்!

அதே தவறு மீண்டும்.. என் மனம் என்னை பார்த்துச் சிரிக்கிறது..மறுபடியும்!!
"அப்பா! இங்கே வாங்களேன்." என்று கத்துகிறேன். முதலில் தம்பி வருகிறான்  எப்பொழுதும் போல். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது முற்றிலும் பொய். என் பிரச்சனைகளில் அவன் இல்லாத நேரங்கள் இல்லை நான் வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம்.
பல நாள் கழித்து நான் இன்று வீட்டில் உள்ளதால் அவன் ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகம். கண்ணுக்குத் அவன் தென்படவில்லை என்ற போதிலும் சிலரின் இருப்பினை உணரமுடிகிறது. கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கிறான் சத்தம் இல்லாமல் சிரிக்கிறான். "அப்பா!" மறுபடியும் என் கூக்குரல். "என்ன ஆச்சு? புதுத்துணிய போடலயா?" என்ற கேள்வியுடன் வந்த அப்பாவுக்கு  என்னை கண்டவுடன் புரிந்தது.
"பட்டன கழட்டாம ஏன் தலை வழியா சட்டைய போடற? " இது அப்பா.
அப்பா பட்டனை கழட்டியதும் சட்டை தலைக்குள் நுழைந்தது.
"அவன் என்னைக்கு அப்பா நீங்க சொல்றத கேப்பான். முடிய பாருங்க. நேத்துதான் போனான் முடி வெட்ட." சமயம் பார்த்து உண்மை என்கிற தோனியில் போட்டுக்கொடுப்பதில் இவனை மிஞ்ச ஆள் கிடையாது. எனக்கு பழகிப்போய்விட்டது இவன் சொல்லும் சொல்லுக்கு அப்பா ஆடுவது.
"சரி கிளம்பு சித்தப்பா வீட்டுக்கு போய்ட்டுவரலாம். ஸ்வீட்டை எடு" என்று பேச்சை மாற்றுகிறேன்.
சில தவறுகள் சிரிக்கும் படியாய்!

Thursday, July 17, 2014

மழை பெய்யும் இன்று

லேசாக எட்டிப்பார்க்கிறது தூரல்... மழை பெய்யக்கூடும் என்பதனால் குடையுடன் கிளம்புகிறேன் இன்று. வேண்டும் வேண்டாம் என நான் முடிவெடுக்க முடியாத சிலவற்றில் குடைக்கு என்றும் முதலிடம் உண்டு.. அடைமழை பெய்யும் நேரங்களில் அதன் இருப்பு தரும் தைரியம் அபரிதமானது... இந்த  ஈரக்காற்றும் குளிர்ந்த நீரும் உடலில் பட்டதும் மூளையை எப்படி மழுங்கடிக்க செய்யகின்றது என்பது புரியவில்லை..
முந்தைய நாள் இருமல், பிடிக்காத இஞ்சிக்கசாயம்,பாலுடன் கசக்கும் தூதுவளை இலை,தொண்டையில் எரிச்சல் கொடுக்கும் வெற்றிலை என அனைத்தும் மறந்துபோகும் அது என் தேகம் பட்ட நொடியில்...இத்தனையும் மனதிலிருந்தாலும் கடும் காய்ச்சல் கூட இருந்தாலும் ஒரு விரலாவது மழையில் நனைத்தால் தான் தூக்கம் வரும் அன்று...அப்படி ஆசைபடுகிறது மனது..
சாலை ஓரத்தில் மழை பெய்யும் நேரத்தில் நடக்கையில், என் எதிரே பெய்த மழையில் நனைந்து போய் நடந்து வருபவர்களை காண்கையில் மனம் ஆசையில் ஆர்பரிக்கின்றது.கொஞ்சம் நனைய வேண்டும் என நினைக்கிறேன்...இரவில் பெய்த மழை காலையையும் சாலையையும் கண்ணுக்கழகாக மாற்றியிருக்கின்றது.. இன்றும் மழை பெய்யும்.. இன்னும் அழகாக மாறும்..

Wednesday, July 16, 2014

புரிதலும் குழப்பமும்...

சில நேரங்களில் மனம் அலைபாய்கையில் நாம் புரிந்ததாகக்கொண்ட பலவற்றை  உண்மையில் நாம் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை என்ற நிலையில் நம் புரிதலில் நமக்கே ஒரு இனம் புரியாத குழப்பம் ஏற்படுகின்றது.. இதனை தெளிவு என்பதா இல்லை குழப்பம் என்பதா என்ற எண்ணம் கூட குளறுபடியானது... இதனை புரிதலின் குழப்பம் அல்லது குழப்பத்தின் புரிதல் என்ற இரண்டில் ஒன்றாகக்கொள்ளலாம்.. ஆனால் இரண்டில் எதனை முடிவாகக்கொள்ளலாம் என்பது முடிவற்ற குழப்பமாகவே இருக்கிறது...

ஒரு ஞாயிறு காலைபொழுது

காற்றாடி நின்று விட்டது.. இந்த புழுக்கத்திலும் ரசிக்கத் தோன்றுகிறது. எங்கிருந்தோ ஒரு குருவி கீச்சிடுகிறது. காகங்கள் கத்துகின்றன. எப்படித்தான் அவை தினம் சீக்கிரம் விழிக்கின்றனவோ ஆச்சர்யமாக இருக்கிறது.
பக்கத்து வீட்டு நாய் அதிசயமாய் குரைக்கின்றது.மின்சாரம் இல்லாதது அதற்கு மிக வருத்தம் போல..மல்லாக்க படுத்திருக்கிறேன் முதுகு முழுக்க வியர்த்து விட்டது...என்ன செய்வது.. எழுந்திருக்க மனமில்லை..புரண்டு படுக்கிறேன். பால்காரன் கூட வந்துவிட்டான் போல... அவன் சைக்கிள் மணி சத்தம் எங்கோ தூரத்தில் கேட்கிறது...இன்னும் கண் திறக்கவில்லை நான், எங்கோ போகின்ற இருசக்கர வண்டிச்சத்தங்கள் கேட்கிறது.. எங்குதான் செல்வார்களோ மக்கள் இவ்வளவு சீக்கிரம்? ஜன்னலை படுத்தபடியே திறந்துவிட்டேன்... விட்டு விட்டு லேசாக காற்றடிக்கிறது..இதமாகத்தான் இருக்கிறது. அதற்கு என் மேல் உள்ள  காதலும் கோபமும் அதன் வேகத்தில் தெரிகிறது. வியர்க்க வைத்து பின் இதமான காற்றடித்து என்னிடம் விளையாடிப் பார்க்கின்றது...மின்சாரம் இல்லாத நேரங்களில் தான் காற்றின் அருமையை அதன் காதலையும் உணர்கிறேன். தினமும் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டும். பக்கத்து வீட்டில் பால் குக்கர் கத்துகின்றது.. மனித படைப்புகளின் சத்தம் அவ்வளவு அழகாக இல்லை..அவைற்றின் சத்தங்களில் எந்த உணர்ச்சியும் என்னால் உணரமுடிவதில்லை என்பதனாலோ என்னவோ..இப்போது காகங்களுடன் ஒரு கிளி போட்டி போட்டு கத்துகிறது.தினமும் சீக்கிரம் முழிக்க வேண்டும்.. நன்றாகத்தான் இருக்கிறது கேட்பதற்கு. இப்போது கண் முழித்து விட்டேன்..  கடிகாரம் மணி ஆறு காட்டுகிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை அவன் ஊரில் இன்னும் மின்வெட்டு இல்லை போலும் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான் ஆனந்தமாய்.. பேப்பர் போடும் சிறுவன் மடித்து எறியும் தினசரி எதிர்த்த வீட்டு வாசலில் படாரென்று விழுகின்றது.. லேசாக சிரித்துக்கொண்டே போகிறான்..அவன் அவ்வளவு எத்தனிக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கையில் அந்த வீட்டு நாய் வெளியே வந்து அவனை பார்த்து முறைக்கின்றது.. அவன் செயலின் காரணமும் அந்த குறுநகையின் அர்த்தமும் அப்போது புரிகின்றது. சூரியன் முழித்து விட்டான்...வானம் சிவக்கின்றது கிழக்கே...அட காற்றாடி சுற்றுகிறது.. மின்சாரம் வந்துவட்டது..
தூக்கம் வரவில்லை கண்மூடி கவனிக்கிறேன் வேறென்ன கேட்கிறது என்று...இந்த ஞாயிற்றுக்கிழமை காலை வாரம் முழுக்க நினைவில் இருக்கும்..

Thursday, July 10, 2014

அது ஒரு புது இரவு!

பரிசாய் வந்த பாத்திர பண்டங்களில் இரண்டு ஒரே மாதிரி இருப்பவைகளை கணக்கு போட்டு கொண்டிருக்கும் அக்கா.. வாரம் முழுக்க ஆட்டம் போட்டு விட்டு இன்று அயர்ந்து தூங்கும் அக்கா பொண்ணு.. என்னவென்று தெரியமா என்றுஎள்ளி நகையாடும் பாட்டி..ஒரக்கண்ணில் பார்த்துவிட்டு கண்டும் காணாத மாதிரி அப்பா...சுண்ட வைத்த பாலை குடியென படுத்தும் அம்மா. என்ன ஓரவஞ்சனை அண்ணிக்கும் கொடுக்க வேண்டும் இது தங்கையின் பெண்ணியம். "எனக்கு!"இது அக்கா பையனின் பசி. இந்த  முழு டிராயர் வேண்டாம் வேஷ்டி உடுத்திக்கோ அனுசரனையாக இருக்கும் என்று காதைகடிக்கும் தாத்தா. கால் மேல் கால் போட்டுக்கொண்டு காணும் பொழுதெல்லாம் கண் சிமிட்டும் அத்தான்.
முதலிரவு முற்றிலும் புதியது!
- உடன் வேலை பார்க்கும் நண்பன்  தெலுங்கில் சொன்னது.