Tuesday, September 30, 2014

மழை பெய்த மறுநாள் காலை!

அதிகாலை ஆறரை மணி ஆகின்றது. தினம் நான் நடக்கும் அதே பாதை புதிதாய் தெரிகிறது இன்று. சுடுகாட்டைத் தாண்டி நடந்து கொண்டிருக்கிறேன்.சவம் ஒன்றும் சிதையில் இல்லை. அப்படி இருப்பதை எட்டத்தில் இருந்து கண்டுவிட்டால் அதன் பின் அந்த பக்கம் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. முடிவுகள் என்றும் என்னை ஈர்ப்பதுண்டு. இவைகளை முடிவுகள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை எனெனில் இவை பலர் வாழ்க்கைபக்கங்களை பாதியினில் குழப்பிவிட்டுச் செல்லும் அரைசூத்திரங்கள் என்பதனாலோ என்னவோ.. சீமைக்கருவைகள் முடிந்து தோட்டக்காடு ஆரம்பித்து விட்டது."என்னப்பா உன் இடத்துல மேக்கால முயல் மேயுது போல.. சம்சாரி எப்புடி நீ சுரக்கா விக்கப்போற.. வலைய கிலைய விரிக்கிறது.. இல்லனா கொஞ்சம் திம்மட்ட தூவுறது" என்ற குரல் கேட்கிறது. விவசாயியை பார்த்து பரிதாபப்பட்டாலும் என் கண்ணில் இன்றுவரை அங்கு தென்படாத முயல்களின் மேல் எனக்கு வந்த பரிதாபம அதனை விஞ்சிக் கொண்டு தொண்டையை அடைக்கின்றது. "அதுங்க என்னப்பண்ணும் ரேஷன் கடையில அரிசி இலவசமா கொடுத்தா அதுங்களும் தோட்டக்காட்டுப்பக்கம் வராது நம்ம பயலுவள போல.விளையிததுதான் விளையும்"என்று சிரித்த பட்டிக்காட்டானின் பேச்சில் பொருளாதாரம் மிகத்தெளிவா விளங்கியது.சூரியன் இன்னும் கண் முழிக்கவில்லை. மரங்கள் அனைத்தும் குளுமையில் கிறங்கிக் கிடக்கின்றன. தோட்டக்காடு முடிந்து பொட்டல்வெளிக்கு வந்து விட்டேன் கண்ணுக்கெட்டும் தூரம் தெரியும் இடமெல்லாம் இரவில் பெய்த மழை நனைத்திருக்கின்றது. கல்லும் மணலுக்கும் போக மீதமான மழை நீர் சின்னச்சின்ன வரிகளாகத் தொடங்கி ஓடையில் ஒன்று சேர்ந்து சலசலவென தெளிவாக ஒடுவது என்னவொரு அழகாக இருக்கிறது. தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மிதமிச்சமானதை வாரி இறைப்பதில் இயற்கையை மிஞ்ச ஆளில்லை. குளத்தில் சாய்ந்து கிடக்கும் கருவேல மரங்களில் பூத்த அந்த மஞ்சள் மலர்கள் கண்ணை கவர்கின்றன.குளத்தங்கரை பனைமரங்கள் ஒரு பக்கம் நனைந்து மறுபக்கம் மழையில் நனையாததால் வாடைக்காற்றின் வேகத்தில் வருத்தத்துடன் மெல்ல அசைகின்றன. காலியாக என்னை தினமும் தாண்டிச்செல்லும அந்த அரசுப்பேருந்து குளத்தங்கரையில் ஏற முடியாமல் நின்று விட்டது. நடத்துநரும் ஓட்டுநரும் இறங்கி குனிந்து எதையோ சரி செய்கிறார்கள். அதற்கும் அந்த அழகான இடத்தை தாண்டி செல்ல மனமில்லை போலும். குளத்தின் மடையை தாண்டி மறு கரையில் ஏறி விட்டேன். பக்கத்து மாந்தோப்பினுள் உழுது போட்டிருக்கிறார்கள். மாமரங்கள் பூத்துவிட்டென. சில காய்கள் வேப்பம்பழம் அளவுக்கு அந்தபூக்களின் நடுவே தென் படுகின்றன. பூக்களை பூச்சிகள் கடிக்காதிருக்க மருந்து தெளிக்கிறார்கள்.நாற்றம் நாசியை புரட்டுகிறது. வேகமாக நடக்கிறேன் இப்போது தெளிவான காற்று சுவாசத்தினை சுத்தப்டுத்துகின்றது. மனதுக்கு பிடிக்காதவைகளை விட்டு மனம் மட்டும் ஏன் இவ்வாறு வேகமாக விலகிச் செல்வதில்லை என்பதன் காரணம் புரியவில்லை. இன்னும் என்னென்வோ எண்ணங்கள் கவலை கொடுப்பதற்காக வரிசையில் நிற்கின்றன.பாதையின் குறுக்கே பாம்பொன்று வேகமாக ஓடுகிறது. பயத்தில் அந்த இடத்திலேயே நிற்கிறேன் நான் அது வயக்காட்டுக்ககுள் வேகமாக புகுந்து விட்டது.பயந்தது யாரென்பது எனக்கு புரியவில்லை. முன்னேறுகிறேன் நான் அந்த பாதையில் மழை பெய்த மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன்.

Monday, September 8, 2014

உன் தரம் என்றும் நிரந்தரம்

மனிதனால்
படபடவென ஒடிக்கப்பட்டு
சரசரவென இழுக்கப்பட்டு
கரகரவென அறுக்கப்பட்டு
மளமளவென தேய்க்கப்பட்டு
கொடுமைகளை அனுபவித்தும்
தன் உறுதி இழக்காத மரப்பொருட்கள்
என்னை பார்த்து சொல்லும் பாடம்
உலகமே உன்னை வாட்டினாலும்
உன்னை நீ மாற்றாதே
உன் தரம் என்றும் நிரந்தரம்!

Saturday, September 6, 2014

புதிதாய் பிறக்கிறேன் அவ்வப்போது..

ஏழு பிறவிகள் உண்டா என்பது என் அறிவுக்கு எட்டாத ஒன்று. எனவே இல்லை என்பது என் பதில் இன்றுவரை. இந்த நாத்திகம்  ஒருபக்கம் இருந்தாலும் நாம் புதிதாய் பிறக்கிறோம் என்பது இன்று முதல் என் எண்ணங்களில் ஒன்றாக இருக்கும். அது எழு முறையன்று எழுபது முறைகளாகவும் இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம் அது அவரவர் அனுபவங்களையும் அவர்களின் தன்மையும் பொருத்தது என தோன்றுகிறது.வாழ்வின் சில தருணங்கள் நம்மை புதிதாய் பிறக்க வழிவகுக்கின்றன.சில நியதிகள் மற்றும் நம்பிக்கைகளின் என்னுள் அன்று தன் இறுதி நாளை சந்திக்கின்றது..சில கோட்பாடுகள் சுக்குநூறாக உடைகின்றன மேலும் சில வளைந்து நெளிந்து புது உருவெடுக்கின்றன.சில நம்பிக்கைகள் புதிதாய் தோன்றுகின்றன பல சிந்தனைகளின் வேகமும் திசைகளும் முழுமையாக புதிய பரிமாணங்களை  தன்னுடையதாயாக்கிக் கொள்கின்றன.சில மாற்றங்களில் சில இழப்புகளில் சில பிறப்புகளில் தினமும் புதிது புதிதாய் பிறக்கறேன் அவ்வப்போது..