Wednesday, June 24, 2015

சில புன்னகைகளுக்கு உடனடி விடைகள் இருந்தால் கொஞ்சம் நன்றாயிருக்கும்

சென்னையில் மழை என்பதால் மூன்று மணி நேரத்துக்கு முன் வந்து சேர்ந்தாயிற்று விமான நிலையத்திற்கு.. தில்லிக்கு முதல் பயணம்..இராவணன் என்னை அழைக்கிறான்; இலங்கைக்கு போகும் பொருட்டு புத்தகத்தினுள் நுழைய முற்படுகிறேன்.. எதோ என்னை என் கனவுலகதினுள் நுழைய விடாமல் தடுக்கிறது...குபேரன் இலங்கையை விட்டு ஓடி விட்டான்; ஒரு வழியாய் இராவணன் இலங்கையை பிடித்துவிட்டான்.கையிலிருக்கும் அந்த புத்தகம் மேல் இருந்த அந்த ஆர்வத்தை எப்படியோ தொலைத்துவிட்டேன்..இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என் விமானம் சென்னையில் இருந்து கிளம்ப. கொஞ்சம் சுற்றி முற்றி பார்க்கிறேன்.. கண்கள் வழக்கம் போல் தேடுகின்றன.

என் கண்கள் எட்டும் தூரம் வரை ஒன்றும் பசுமையாய் தெரியவில்லை. இன்னும் இரண்டு மணிநேரம் எப்படி போகும் என்பது எனக்கு புரியவில்லை.என் மூளை எழுத்துக்களை கிரகிக்க மறுக்கிறது.என்ன செய்வதென்று புரியவில்லை..  சில நேரங்கள் கொஞ்சம் விநோதமானவை; அன்று கூட அப்படித்தான். ஒரு ஐந்து நிமிடம் கழித்து கொஞ்சம் பசுமை தலை காட்டியது..எனக்கு எதிர்த்தால் போல் வந்தமர்ந்தபோது இன்றைய நாள் இனிதாக தொடங்கும் என்று விமான நிலையத்தினுள் நுழையும் போது எங்கோ கேட்டது ஞாபகத்தில் வந்து மறைந்தது..என்ன ஒரு வேகம், பிடித்த விஷயங்களில் மனம் வேகமாக முழ்குகிறது.. ஒரு அரைமணி நேரம் ஆகி இருக்கும், புத்தகத்தில் ஒரு பக்கம் கூட நகரவில்லை..இருந்தும், புத்தகத்தில் அடுத்த பக்கம் திருப்புகிறேன்.. அந்த பக்கத்தை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்...புத்தகம் என் கை மீறி எங்கும் போகாது என்ற எண்ணம் எனக்கு.

நேரம் போனது தெரியாது.. தில்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தாயிற்று.. காற்றடைத்த அந்த இரும்பு கூட்டுக்குள் நுழைய மனம் இல்லை; என்ன செய்வது, வருத்ததுடன் புத்தகத்தை மூடுகிறேன்.. கொண்டுவந்த பையை தோளில் மாட்டியாயிற்று. மெல்ல எழுந்து அந்த விமானத்தில் ஏறும் வாசல் நோக்கி நடக்கிறேன்..கொஞ்சம் கூட்டம் அதனால் வரிசையில் நிற்கிறேன்...சின்ன சலனம் மனதில்; மறுபடி ஒருமுறை திரும்பி பார்த்தால் என்ன என்று.. மனது கேட்பதில்லை சில விஷயங்களில்.. திரும்பி பார்க்கிறேன் மெல்ல..அந்த ஒரு பார்வை, உடனடியாய் ஒரு புன்னகை தவழ்கிறது சிறுகுறும்புத்தனத்துடன்..நான் அதை கிரகிப்பதை கண்டுகொண்டவுடன் வேகமாய் ஓடி மறைகிறது..அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை. தெரியாத மனிதர்களிடம் இருந்து, நமக்கு பரிச்சயம் இல்லாத ஒரு புதிய இடத்தில், புரியாத வகையில் வரும் இது போன்ற சில புன்னகைகளுக்கு உடனடி விடைகள் இருந்தால் என்னை போன்ற மரமண்டைகளுக்கு வாழ்க்கை கொஞ்சம் நன்றாயிருக்கும்.

Wednesday, June 10, 2015

மறுபடியும் உருமாறும் இந்த ஆலமரம்

அந்த ஆலமரம் கொஞ்சம் பெரியதுதான். சின்ன வயது முதல் நான் அதனை பார்க்கிறேன். ஊரை விட்டு தெற்கே போகும் ரோட்டில் பல மரங்கள் புயலுக்கு விழுந்தபோதும், வெயிலுக்கு காய்ந்தபோதும் கொஞ்சம் கூட கலங்காமல் அதே கம்பீரத்துடன், அடிக்கும் காற்றில் அசைந்து கொண்டு அழகாய் இருக்கும் அதன் மனோபாவம் என்றும் என்னை ஈர்த்ததுண்டு. சில மருந்துக்கு தன் விழுதுகளையும், சில திருமணத்துக்கு தன் கிளைகளையும் என வாரத்திற்கு ஒருமுறை தானம் செய்தாலும் கொஞ்சம் கூட அளவில் சுருங்கி நான் கண்டதில்லை இதுவரையில்...என்னை விட வேகமாவே வளர்ந்து வருகிறது என்பதில் எனக்கு அதன் மேல் கொஞ்சம் கோபம் கூட இருந்ததுண்டு..

வருடங்கள் செல்ல செல்ல அதன் இருப்பின் விலாசம் கொஞ்சம் கொஞ்சமாய் காலத்திற்கேட்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது...நடந்துபோகும் சிலருக்கு நிழல் குடையாய், மழை பெய்யும் நேரங்களில் ஒதுங்க இடமாய் எனக்கு விவரம் தெரிந்தபோது இருந்த அது. மொட்டை வெயிலில் ஒன்றுக்கு என்று அந்த வழியில் போவோர் வருவோர் அனைவரின் அவசரத்தை கழிக்கும் இடமாய் உருமாறியபோது கொஞ்சம் வருத்தமாய் இருந்தது.

பின்னர் காவல்காரர்களுக்கு பணம் வசூலிக்கும் சுங்கமாய் நான் மோட்டார் வண்டி ஓட்ட கற்ற காலங்களில் என்னை கொஞ்சம் துன்புறுத்தியது. விவரம் தெரிந்த போது விடலைகளுக்கு தண்ணி அடிக்கும் புகலிடமாய் அது புது உருவெடுத்தபோது நான் கூட கொஞ்சம் வியந்துதான் போனேன் அதை பார்த்து..பின்னர் இளநி/பதனி விற்கும் கடையாய் ஒரு பக்கமும், தர்பூசணிகள் தற்காலிகமாக தங்கும் இடமுமாய் மறுபக்கமும் போன வருடம் உருவெடுத்த போது கொஞ்சம் வித்தியாசமாய், ஆனால் அழகாய் தான் இருந்தது.

கடந்த வாரம் எதோ விஷயமாய் அந்த பக்கம் நான் போக; ஆலம்விழுதுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி, பொட்டிட்டு பூவைத்து மாலையிட்டு மக்கள் கொஞ்சம் பேர் பயபக்தியுடன் பொங்கல் வைப்பதை பார்த்தவுடன் திகைத்து தான் போனேன் நான்..

இப்படி உருமாறும் ஒரு மரத்தை நான் வேறுங்கும் கண்டதில்லை..நம்பிக்கை இருக்கிறது எனக்கு; மறுபடியும் உருமாறும் இந்த ஆலமரம் ..


Thursday, June 4, 2015

ஆட்டுக்கு வயசாயிடுச்சு

ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம், ஞாயிற்று கிழமையாக தான் இருக்கும் கண்டிப்பாக. அவ்வளவாக போக்குவரத்து கிராமங்களை இணைக்காத  காலம். சிற்றுந்து என்ற வார்த்தை தமிழில் வடிவமைக்கபடாத நேரம் அது. மோட்டார்சைக்கிள்கள் சாலைகளை ஆக்கிரமிக்காத, மாட்டு வண்டிகள் உயிரோடிருக்கு போராடி கொண்டிருந்த அந்த கடைசி சில வருடங்களில் இதுவும் ஒன்று.ஆடி அசைந்து வரும் அந்த அரசாங்க பேருந்துகளுக்காக மக்கள் காத்து கிடந்த நேரங்கள் அவை.

 43ஈ -17 கடையம் - ஸ்ரீனிவாசா - எவிஆர்எம்வி - கணபதி என அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கால அட்டவணையை மனக்கணக்கில் வைத்துகொண்டு இரு பேருந்து வந்து போகும் இடைவெளியில் கடை தெருவில் துணி எடுக்கவும், கல்யாண வீட்டுக்கு சீர் செய்யவும், துக்க வீட்டுக்கு விசாரிக்க செல்லவும் என்று தங்கள் வீட்டு உறவுகள் தொடர்வதையும், தங்கள் தேவைகளையும்  மக்கள் பூர்த்தி செய்த காலம். 

எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதை விட தாத்தா வீட்டுக்கு போகும் நாள் என்று சொல்லும் அளவில் ஒரு நடைமுறை எங்கள் வீட்டில்.காலை எட்டு மணிக்கு தாத்தா எங்கள் வீட்டில் ஆஜராவது வழக்கம். ஒரு சர்க்கரை இல்லாத காபி அல்லது பால்.ஒரு சின்ன பேச்சு "அப்புறம் கறி எடுக்க வந்தேன். சீக்கிரமா வந்திரு பிள்ளைகள கூட்டிகிட்டு" என்பதுடன் அந்த ஞாயிற்று கிழமை விருந்துக்கு அழைப்பது நிறைவு பெரும்.

ஞாயிற்று கிழமை 10 மணிக்குள் வீட்டில் இருந்து புறப்பாடு. ஒரு அரைமணி நேரமாவது காத்திருப்பு பேருந்துக்காக.. அப்போதெல்லாம் அது ஒரு பெரிய விஷயமல்ல.. இப்போது ஐந்து நிமிடமே யுகங்களாக தோன்றுகிறது..

ஒரு மூன்று கிலோமீட்டர் தாண்டி குளத்தங்கரையில் முதல் நிறுத்தம். அங்கே தான் இறங்குவோம்.ஊர் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். மழை பெய்யும் காலங்களில் குளத்தின் மறுகால் ரோட்டோரோமாக ஓடும். அந்த தெளிந்த நீரில் காலை நனைப்பதில் ஒரு சந்தோசம்.  அதில் அரட்டளை பார்த்தால் இன்னும் ஒரு குதுகலிப்பு. ஒரு பக்கம் குளம் இன்னொரு பக்கம் வயக்காடு,அப்புறம் மத்தியான வெயில் தெரியாத மாதிரி நல்ல காத்து. தாத்தா வீட்டுக்கு போனால் அங்கே சித்தி பிள்ளைகள், தின்பண்டம், ஊஞ்சல், பசு மாடு, கோழிக்கறி இப்படி நேரம் போக ஒரு ஐஞ்சு மணி வாக்கிலே ஊர் திரும்பல்.அன்றும் அப்படித்தான். ஆனால் அன்று மேகம் மப்பும் மந்தாரமுமாய் இருக்கவே அவசர அவசரமாக  பேருந்து பிடிக்க வேண்டும் என்ற எத்தனிப்பு.

மாடசாமி கோவிலுக்குள் நுழைந்து, கோயில் தோட்டம்  வழியாக பழைய பால் பண்ணையை கடந்த போது வரப்பின் இரு பக்கங்களிலும் செம்மறி ஆடுகள் செத்து கிடந்தன. சில எதோ நோய் வாய் பட்டதால் தோல் உரிந்து கொப்பளங்களுடன் படுத்து கிடந்தன.தம்பி கேட்டான் முதல் கேள்வி என்றும் போல்.

 "இந்த ஆடு எல்லாம் ஏனம்மா இப்படி இருக்கது? " 

அவனுக்கு என்ன ஒரு ஆறு வயசிருக்கும். 

"இந்த ஆடுகெல்லாம் வயசாயிடுச்சு.. அதான் செத்து போகுது."இது அம்மாவின் பதில்.

நான் அம்மா முகத்தை பார்கிறேன். எனக்கு தெரியும்  அது பொய் என்று. அவன் தொனதொனப்பு நிற்பதில்லை என்பதனால் இது ஒரு மந்திரம். அவன் கேள்வி மேல் கேள்வி கேட்பவன் ஆயிற்றே என்று 'இந்த பொய் - இந்த பதில்'. ஆனால் அவன் கேள்விகள் என்றும் நிற்பதில்லை.. ஒன்றன் பின் ஒன்றாக வந்து கேள்வி மேல் கேள்வி, பதிலில் இருந்து கேள்வி என நீண்டு கொண்டே போகும்.விடுவானா அவன் இன்று மட்டும்.

ஒரு பத்து அடி தூரம் போயிருப்போம். அங்கே இரண்டு செம்மறி ஆடுகள் சண்டை போட்டு கொண்டிருந்தன.

"இதுங்களுக்கும் அப்போ வயசான செத்துடுமா? " என்ற அடுத்த கேள்வி.. "ஆமா டா.இதுங்களுக்கும் வயசான செத்துடும்"

குளத்தங்ககரையை பிடித்தாயிற்று. ஒன்றிரண்டு தூறல் விழுகிறது. வேகமா நடக்கிறோம்.அப்போது ஒரு தாத்தா ஒரு இருபது ஆடுகளுடன் எங்களை எதிர்த்து நடந்து வருகிறார். ஆடுகள் எங்களை கடக்கின்றன. 

"அப்போ இந்த ஆடு எல்லாம் கூட வயசான செத்துடுமா?" 

அம்மாவுக்கு ஒரு பயம் எங்கே ஆட்டுக்காரர் காதில் கேட்டு விடுமோ என்று. 

"இந்த ஆட்டுகேல்லாம் இன்னும் வயசாகல.. இன்னும் ரொம்ப நாள் உயிரோட தான் இருக்கும்.." ஒரு வழியாய் பதில் சொல்லியாயிற்று.

ஆடுகள் எங்களை கடந்து விட்டன. ஆட்டுக்கார தாத்தா எங்களை பார்த்து சிரிக்கிறார்.

"நல்ல இருக்கியாம்மா? உன் பிள்ளைகளா.. நல்ல இருக்கட்டும்" என்ற அவரை பார்த்து "ஆமாம்" என்று அம்மா சொன்ன நேரம் அந்த கேள்வி வந்தது இவனிடம் இருந்து.

"அப்போ இந்த தாத்தாவுக்கு வயசாயிடுச்சுல்ல.. இவரு எப்போ அம்மா சாவாரு?" 

தூக்கி வாரி போட்டது எனக்கு.. என்ன சொல்ல வென்று அம்மா திகைக்க.. 

"அதுக்கு தான் கண்ணு நானும் காத்து கிட்டு இருக்கேன்.. வந்து தொலைய மாட்டேங்குது. உன் பையன் நல்லா கேள்வி கேக்குறான்" என்று அவர் சிரித்துகொண்டே பதில் சொல்லி போகிறார்.

ஆட்டுக்கு வயசாயிடுச்சு.....

Monday, June 1, 2015

என் பார்வையில் புது அர்த்தங்கள்

தாத்தா வீட்டில்  நிறைய புகைப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் . அந்த வயதில் அவற்றை பற்றி ஒருநாளும் கேள்வி கேட்டதில்லை. அம்மாவும் அப்பாவும் திருமணம் முடிந்த சில நாட்களில் எடுத்த புகைப்படம் ஒன்று, அதன்பின் அதே போல் சித்தி சித்தப்பாவுடன் ஒன்று என நான் யூகித்துக் கொண்டவை சில. எனக்கு தெரியாத புகைப்படங்கள் பல.

நல்ல உயரத்தில் கொஞ்சம் முன் சாய்ந்தாற்ப்போல் நடுவே முகம் பார்க்கும் கண்ணாடி பதித்து இருபுறமும் புகைப்படம் இருக்கும் ஒரு பெரிய சட்டம் கீழே நின்று கண்ணாடியில் முகம் பார்க்கும்படியாய் ஒன்று உண்டு. வீட்டில் நுழையும்போது இரு பெரிய மரத்தூண்களிடையே நன்றாகத் தெரியும் அந்த புகைப்படம். ஒன்றில் கருப்புச்சட்டை வெள்ளைதாடியுடன் ஒரு உருவம் இருக்கும் கண்கள் பளிச்சென்று இருக்கும்.யாரென்று தெரியாது. முகம் கொஞ்சம் ஒன்றுபோல் இருக்க, தாத்தாவின் தாத்தாவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.  குட்டி மீசையுடன் சிரித்துக் கொண்டிருக்கும் இன்னொன்றைஇறந்து போனதாய் சொல்லப்படும் சின்னதாத்தா என்று கொண்டேன்.

ஒரு நாள் புரிந்தது நான் பாட்டனாகக் கொண்டது உண்மையில் என் பாட்டன் அல்ல புதுத்தமிழனுக்கு பாட்டனான பெரியார் என்று, தாத்தாவின் தம்பி என நான் கொண்டது அனைவருக்கும் அண்ணனான அண்ணா என்று.. என் பார்வையில் புதிய அர்த்தங்கள் என்றும்!!

Tuesday, May 26, 2015

ஆறு நூறு ரூபா நோட்டு.. அப்புறம் பத்து ரூபா..

"ஏ தங்கம்! உங்க அப்பாம்ம இருக்காவளா"என்றது ஒரு குரல்.

 இந்த அப்பாம்மக்கி வேற வேல இல்ல.. ஊருல இருக்குற பாதி சனம் இவியள தேடி வீட்டுக்கு வரும்.. தெருவுல சண்ட போடாத ஆளு கெடையாது..இந்த ஊருல தண்ணி இல்லாத காலத்துல எங்க வீட்டுல கைபம்பு இருந்துது.. தெருவே மத்தியானம் சமையல் பண்ண எங்க வீட்டுக்கு தண்ணி அடிக்க வரும்.. ஆனா மூணு நாளுக்கு ஒரு தடவ ஆத்து தண்ணி வரும்போது மட்டும் தெரு நல்லியில ஒரு சண்டை நடக்குமே சாமி, தெருவுல உள்ள அதனை குடும்ப மானமும் கப்பலேறும்.

ஆனா அடுத்த நாள் காலையில எங்க தோட்டத்துல வெளஞ்ச முருங்கக்கா.... வெயில் காலத்துல புளி, அப்புறம் மாம்பழம், வீட்டு ரோஜா பூ இப்படி ஏக போக வியாபாரமும் நடக்கும் அதே ஆட்களுடன்.சில கீரை கட்டுக்கள் இலவசமாக போகும்.. சில நேரம் இலவசமாக பப்பாளிபழம், கொடுக்காய் புளி, தௌனு, பனங்கிழங்கு வரும்.. இந்த பண்ட மாற்று முறை தெரு முனையில் கடை வச்சிருக்கிரவனுக்கு ஒரு கோவத்த கெளப்பும் பாருங்க.. அவன் என்ன பண்ணுவான்.. அவன் நாலு ரூபாய்க்கு முருங்கை வித்தா இங்க ரெண்டு ரூபாக்கு வீட்டுவாசல்ல போய் குடுக்கிறது..அதுவும் கடனுக்கு..சொன்ன நாள் அத குடுக்கலன்னா அடுத்த நாள் இன்னொரு கதை தெருவுல அரங்கேறும்.

இப்படி ஒரு ஆளு, அந்த ஆள தேடி வீட்டுக்கு வர நாலு பேரு...எரிச்சலா இருக்காதா உங்களுக்கே!

"வீட்ல ஆளு இல்ல.. எங்க போனாவன்னு எனக்கு தெரியாது" என்றேன் நான்

"ஒண்ணுமில்ல மணி.. இந்த மாசம் வாடகை குடுக்கல.. உங்க பழைய வீட்டிலதான் இருக்கேன் சொன்னது அந்த ஆளு..இந்தா தங்கம் குடுத்திரு உங்க அப்பாம்ம கிட்ட" என்றதும் வாங்கிக்கொண்டேன்

கொஞ்சம் லேசான வேல தான்... இல்லனா யாரு குடுத்தானு நான்அடையாளம்  சொல்றதுக்குள்ள எனக்கு தொண்டை அடைக்கும்....எண்ண தொடங்கினேன்.. ஆறு நூறு ரூபா நோட்டு..அம்பது ரூபா..அப்புறம் கொஞ்சம் இருபது ரூபா நோட்டு... அதுக்கும் அப்புறம் பத்து ரூபா.. மழை நேரம்கிரதால ஒண்ணு இன்னொன்னு மேல ஓட்டிகிட்டு வரவே இல்லை.. அதற்க்கு மேல் எண்ண எனக்கு பிடிக்கவில்லை.ஒட்டி கொண்டிருந்த அந்த பத்து ரூபா நோட்டுக்கள் தான் உண்மையான காரணம்...சரி.. குடுதிடறேன்னுட்டு.. நான் கொண்டு வந்து மேசை மேல வச்சிட்டேன்.. அந்த பொம்பள திரும்ப வந்து "எ மணி.. கொஞ்சம் மறுபடி ஒரு தடவ எண்ணி பாத்திறேன்.. காசு விசயத்துல என்னைக்கும் கண்ணும் கருத்துமா இருக்கணும்" என்றதும்.. மறுபடி எண்ண தொடங்கினேன் மனதுக்குள் திட்டி கொண்டே!

ஐநூறு ரூபாய்க்கு நூறு ரூபா நோட்டு...அப்புறம் ஒரு அம்பது ரூபா.. கொஞ்சம் இருபது ரூபா நோட்டு..அப்புறம் பாத்து ரூபா.. மொத்தத்தில் தொண்ணூறு.. அட கருமமே என் தமிழில் தீயை வைக்க.. தொள்ளாயிரம்... ஆம்... தொள்ளாயிரம் ரூபாய்..

"வாடகை எவ்ளோவு.? ஆயிரம் தானே.. நீங்க என்ன தொள்ளாயிரம் ரூபா குடுத்துருக்கிய?" என்றதும் அந்த ஆளுக்கு தூக்கி வாரி போட்டிருக்க வேண்டும்..முகத்தில் அப்படி ஒரு ஆச்சரியம்..

"இல்லையே.. சரியாய் தானே.. இருந்துது" என்ற அவரிடம்.

"இல்லையில்ல" என்று நான் சொல்ல.

"என் மவ தான் எண்ணனுனா... சரி நான் கொண்டு வாரேன்" என்று சென்றது.

நூறு ருபாய் வந்து சேர்ந்து விட்டது உடனடியாய்.... எனக்கு ஒரு நிம்மதி... அந்த பெண்ணுக்கு ஒரே குழப்பம் போல.. இன்னும் தெளியவில்லை என்பது பார்த்த நொடியில் தெரிகிறது..

ஒரு மனதிருப்தி... இனிமேல் பணத்தை எண்ணாமல் வாங்க கூடாது.. எனக்கு நானே அறிவுரை கூறி கொண்டேன்.

அடுத்த நொடி நான் முக நூலில். இருந்தாலும் என் மனம் இன்னும் அடங்க வில்லை.. நடந்ததை அசை போட்டு கொண்டிருந்தது.

என் மனதில் ஓடுகிறது வார்த்தை ரயில்.."அப்பாம்ம..வாடகை வீடு..ஆயிரம் ரூபா வாடகை..ஆறு நூறு ரூபா நோட்டு.. ஆமாம் ஆறு நூறு ரூபா நோட்டு அல்லவா நான் எண்ணினேன் முதல்முறை. எப்படி ஐந்தானது?"

தலையை சொரிந்து நான் யோசிக்கையில்... என் காலுக்கு அருகில் ஒரு நூறு ரூபா நோட்டு காற்றில் மெல்ல அசைகிறது. 

"அடச்சே!"... நான் முதலில் பணத்தை மேஜையில் வைத்த போது காற்றில் கீழே விழுந்திருக்க வேண்டும்..நெஞ்சு படபட வென்று அடித்து கொண்டது.. வேர்த்து கூட விட்டது.

நான் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை தான் ஆனாலும்.. எப்படி இப்படி ஒரு தப்பு செய்தேன்? கணக்கில் வாங்கிய நூறு எல்லாம்என் கண் முன் வந்து சிரிக்கின்றன.. விறுவிறுவென நடந்தேன்..

வீட்டு வாசலில் அந்த பெண் தலையில் கை வைத்து உட்கார்திருக்க.. அவள் மகள் "நான் எண்ணி தான் குடுத்தேன் உன்கிட்ட... போறே வழியில நீ தான் தொலசிருக்கணும்" என்று வசைபாடி கொண்டிருக்க... உள்ளிருந்து மகன் "அத விட்டு தள்ளுங்க.. அடுத்த காரியத்த பாருங்க ரெண்டு பேரும்" என்று கொஞ்சம் சத்தம் போட.. கொஞ்சம் வெட்கமாக தான் இருந்தது என் தவறை நான் சென்று ஒப்பு கொள்ள, வேகமாய் போய் நின்று.. அதை விட வேகமாய் கதையை சொல்லிவிட்டு ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு... அதே வேகத்தில் திரும்ப நடக்கிறேன்..

இப்போது வேர்க்கவில்லை.. அந்த படபடப்பும் என்னிடம் இல்லை.. இந்த வேகம் அமைதியை தருகிறது.

ஒருநாள் இதை பற்றி நான் நினைக்கையில் கண்டிப்பாக சிரிப்பு வரும் என மனம் சொல்கிறது.. அடுத்த நொடி எனக்கு சிரிப்பு முட்டி கொண்டு வருகிறது.. ஒரு வேளை அந்த ஒரு நாள் இன்று தான் போலும்..


பின் குறிப்பு:

திருநெல்வேலி பேச்சு வழக்கில்...
அப்பாம்ம - அப்பாவின் அம்மா!

Wednesday, May 13, 2015

ரயில்கள் கூடும் எக்மோர் ரயில் நிலையம்

அனல் காத்து, நல்ல வெயில், கையிலே ஒரு பிஸ்லேரி தண்ணீர் பாட்டில்,புழுங்கியதால் மணிகட்டை உறுத்தும் கைகடிகாரம், வேர்வையில் நனைந்த சட்டை, ஒரு ஞாயிறு மதியம், ரயில்கள் கூடும் எக்மோர் ரயில் நிலையம் இவற்றுகிடையில் நான்..இதுவே கதை களம்..

கூகூ...கூகூஊன்...கூகூ...ஊன்...இந்த சப்தம்.. இருந்த சப்தங்களை அவ்வப்போது தன்னுள் வாரிபோட்டு கொண்டது..தடக் தடக் என்ற ஒலி ஒரு அழகான இசை போல ஒருசேர்ந்து கேட்க.. அவ்வப்போது தடக் தட்தட்தட் என கொஞ்சம் பிரச்சனை பண்ண..ஒரு சின்ன சலனம் நெஞ்சில் எழுந்து உடன் மறைவது போல இந்த ஓசையும் பின்னர் காணாமல் போனது....இந்த எக்மோர் ரயில் நிலையம் ரொம்ப மாறவில்லை நான் பார்த்த இந்த எட்டு ஆண்டுகளில்..ஆனால் நான் முதலில் பார்த்தபடியும் இல்லை. மாற்றங்களை தனதுடையதாக்கி தன்மை மாறாமல் இருக்கும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாறான இடத்தில மக்கள் வேகமாய் தங்கள் உடமைகளை தூக்கி கொண்டு ஓடும் அந்த நடை பாதையில் ஒரு உருவம்.. கிழ உருவம்தான்....மல்லாக்க படுத்திருக்கிறது....ஒரு எண்பது வயதிருக்கலாம்.. மேல் சட்டையில்லை.. இடுப்பில் வெட்டி.. இடையில் ஒரு துண்டு... சவரம் செய்து பல மாதம் ஆன ஒரு முகம்.. வெள்ளை முடி அதில்  கொஞ்சம் கருப்பு இன்னும் மிச்சமிருக்கிறது.ஒரு பத்து பதினைந்து ஈக்கள் மொய்க்க கொஞ்சம் கூட சலனமில்லாமல் ஒரு தூக்கம் அந்த ஆளுக்கு..கோபம் பொத்துகொண்டு வந்ததது எனக்கு இருந்தாலும் ஒரு புறம் அந்த ஆளின் அந்த நிம்மதியான தூக்கத்தை நினைத்து ஒரு வகையில் கொஞ்சம்  பொறாமையும் கூட..தூக்கம் அவரின் ஒரே சொத்தாக கூட இருக்கலாம் என்று நினைத்து கொண்டேன்..

ஒரு காலத்தில் எக்மோரை  பார்த்து பிரமித்தது உண்டு..உயர்ந்த கட்டடம்..சிவப்பு சுவர்கள்... விரிந்த கூரை..அகண்ட நடைமேடைகள்,அந்த மர படிகட்டுகள் என.. கொஞ்சம் சிலிர்ப்பூட்டிய  இடம்தான்.. பின்னர் கொஞ்ச நாளில் பழகி போய்விட்டது..அதன் பின் ரொம்ப அலட்டிகொண்டதில்லை இந்த இடத்தை பற்றி..மனிதர்கள் கூட இப்படித்தான்.. முதல் சந்திப்பில் எப்போதுமே ஒரு பிரம்மாண்டம்.. பின்னர் பழகி போன பின் அந்த பிரம்மாண்டம் தெரிவதில்லை.. ஆனால் பிரிந்து சென்று சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது தெரியும் ஒரு பிணைப்பு....இன்று என்னவோ கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறது.. எனக்குள் இந்த இடத்துடன் ஒரு தொடர்பு இருக்கிறதென்று.. எதோ என்னுடையது என்ற ஒரு பந்தம் புலப்படுகிறது..அரசாங்க சொத்தில் ஆசை படுபவன் என்று நீங்கள் எடுத்து கொண்டாலும் நான் அதை பற்றி கவலை கொள்ள போவதில்லை இந்த விஷயத்தில்...இவ்வாறு நான் என் நினைவுகளையும் மற்றும் பல தேவையற்ற விஷயங்களையும் கிழ மாடு போல மெல்ல அசை போட்டுகொண்டிருக்கும் போதுதான் மறுபடியும் என் கண்ணில் பட்டது அந்த உருவம்..

அதே உருவம் தான்.. கொஞ்சம் கூட அசைந்தபாடில்லை.. அப்படியே.. அத்தனை சத்தங்களின் நடுவிலே.. ஒரு நொடியில் மனம் திக்கென்றது.. ஒரு வேளை.. அப்படியிருக்கலாமோ.. ஆம் கொஞ்சம் கூட அசைவில்லை..கூர்ந்து கவனிக்கிறேன்.. நெஞ்சு கூட்டில் ஒரு ஏற்ற இறக்கம்?? ஊஹும்.. ஒன்றும் இல்லை..வயிறு உப்பி பின் தன்னிலை அடைகிறதா என்று கூட கவனிக்கிறேன்.. ஒன்றும் இல்லை..இத்தனை ஈக்கள் மொய்த்தும் கொஞ்சம் கூட உடலில் ஒரு உணர்ச்சி இல்லையென்றால்.. என்னவோ.. மனம் பதறுகிறது.. கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால் என்ன? நாம் மட்டுமா இங்கு இருக்கிறோம்?  அனைவரும் தத்தம் வேலைகளில் உள்ளபடி நானும் இருந்தால் என்ன? சுற்றும் முற்றும் கவனிக்கிறேன் இப்போது.. வேறு எவராவது கவனிக்கிறார்களா என்று... எனக்கு அடுத்த பெஞ்சில் அமர்திருக்கும் ஒரு நாற்பது வயது சக பயணியும் என்னை போல் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்..ஒரு வகையில் மனதுக்கு சந்தோசம்..தம்பி உயிர் இல்லையோ ஒரு வேளை என்று அந்த பெண்மணி என்னை பார்த்து கேட்டதும் தூக்கி போட்டது எனக்கு..என்னை கவனித்திருக்க வேண்டும். நான் குற்றம் செய்யவில்லை என்ற போதும் எதோ நான் எதோ தவறு செய்து மாட்டிகொண்ட ஒரு பயம் எனக்கு..நாக்கு பிறழ்கிறது.. பயம் தொற்றிகொள்கிறது.. இந்த ஜனகூட்டதின் நடுவே இந்த உடல் என்னை பதற வைக்கிறது..

தெரியவில்லை என்று நான் சொல்ல துவங்கும் நேரம் அந்த கிழவன் தன் கையை எடுத்து இடுப்பில் சொரிய.. அந்த பெண்மணி சிரிக்கிறார் சத்தமாய்.. என்னை அறியாமல் ஒரு புன்னகை என் இதழ்களில்..நம்ம வருத்தமில்லாமல் ரயில் ஏறலாம் தம்பி... கொஞ்சம் கவலையாய்தான் இருந்தது என்று அந்த அம்மா சொல்லும்போதுதான்  என் மனம் அமைதியாகிறது....

கூகூ...கூகூஊன்...கூகூ...ஊன்....தடக் தடக்..என அடுத்த ரயில் வண்டி புறப்பட தயாராகிறது..நான் என் வண்டிக்காக காத்திருக்கிறேன்... 


Tuesday, May 12, 2015

காபி குடிக்க வேண்டும் என்று என் கால்கள் சொல்கிறது.

காபி டேயில் காப்புசினோவை ரசித்து முடித்து, உருகி நின்ற சாக்லேட் பாண்டஸி கேக்கை நண்பர்களுடன் கொஞ்சம் ருசித்து முடித்து, அவர்களை அங்கே கழட்டிவிட்டு விட்டு ...ம்...இல்லை...ஒரு சந்தேகம்.. ஒரு வேளை..அவர்கள் என்னை கழட்டி விட்டார்களோ? இப்போ நெனைச்சு பார்த்தா புரியவில்லை..சரி எதோ ஒன்று!! சில தருணங்கள் வாழ்வில் சம்பவங்கள் இப்படித்தான்.. அவை நடந்த பின்னும் புரிவதில்லை என்றும்..புரட்டி பார்த்தால் பல முடிச்சுகள் இப்படி தான் இருக்கும் அவிழாமல்..ரொம்ப யோசிக்காமல் அங்கிருந்து அடுத்த நிறுத்தம் எக்ஸ்பிரஸ் அவெனு!

மொட்டை வெயிலில் ஊரு சுத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டா ஒரு பில்டிங்குள்ள இல்லனா ஒரு கடைக்குள்ள இருந்தா தான் உயிரோட இருக்க முடியும் நம்ம சென்னையில..... எக்ஸ்பிரஸ் அவெனுவில் உட்கார இடமில்லாது ஒரு கடை விடாது சுற்றி..கடைசியில் பரிஸ்டாவில் இடம் இருப்பதை மூன்றாவது மாடியில் இருந்து கவனித்து... விரைந்து சென்று அந்த இடத்தை பிடித்து கொண்டு..ஒரு கிரீன் ஆப்பிள் மொஜிடோ வாங்கி  ரசித்து ருசித்து...இல்லை! இல்லை!....அதனை என் கால்கள் அனுபவித்து குடிக்க ஒரு ஒரு மணிநேரம் ஆனது.. கடைக்காரன் என்னை திட்டாத குறை.. என்னவோ தெரியவில்லை அந்த இடம் ரொம்ப பிடித்து போக.. ஒரு சிக்கன் கிரில்லுடு சான்ட்விச் இப்போது வாங்கினேன்...மறுபடியும் ஒரு ஒரு மணி நேரம் எடுத்தது ஏன் என்ற கேள்விக்கு விடை என் கால்கள்தான் சொல்ல வேண்டும்.. அவற்றுக்கு வாய் இருந்தால் ஒப்பாரி வைத்திருக்கும்...பதில் எங்கே சொல்லும்..சரி விஷயத்திற்கு வருவோம்..

கடைசியில் நான் ஒரு வழியாய் பரிஸ்டாவில் ..அட என்னங்க.. சுவாரசியமாய் எதாவது நீங்கள் எதிர் பார்த்தால் அது உங்கள் தவறு...காதல் ஜோடிகள் தான் காபி ஷோப்பில் நேரம் கழிக்க முடியும் என்றெல்லாம் ஒன்றுமல்ல..தனியாய் கூட நேரம் கழிக்க முடியும்...தனிமை தரும் இன்பம்கூட அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் புரியும்...அந்த தனிமை தரும் சுதந்திரம் மற்றும் அதன் சகவாசம் ஒரு நல்ல பூத கண்ணாடி..

ஆமாங்க நீங்க கவனிச்சதில்ல.....என கண்களில் தெரிவது...முதல் முறை ஹைஹீல்ஸ் போட்ட பொண்ணுங்க,கையில் காசில்லாமல் சுற்றும் பசங்க,கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் சில குழந்தைகள்.. ஆம்..வெற்றி களிப்பில்..கொஞ்சம் கோபத்தோடு போரில் தோற்ற தொனியில் இன்னும் சில குட்டி பிசாசுகள் பழி வாங்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு...ஹா ஹா!.
கவலையின்றி கட்டி பிடித்து கொண்டு போகும் இளம் காதல் ஜோடிகள், ஒரு அடி தூரம் விட்டு நடத்து வரும் தம்பதிகள்..அட என்ன பிரச்சனையோ.., வாஞ்சையோடு கைகோர்த்து வரும் தாத்தா பாட்டிகள்..இதை விட்டால்..ஓடும் குழந்தை, பரபரக்கும் மைபோட்ட கண்கள், கண்கொட்ட மறந்த பசங்க, கூந்தலை நொடிக்கொரு முறை கோதிவிடும் பெண்கள், பத்து பேர் தன்னை பார்க்க வேண்டும் என்ற நடை சிலருக்கு, தன்னை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்ற மௌனம் இன்னும் சிலருக்கு, ஆம்.. ஒளிந்து கொள்கிறார்கள் தங்களுள் தாங்களாகவே. சில புன்னகைகளை புரிந்து கொண்ட சிலர், அதில் குழம்பி போன சிலர், அப்புறம் கவிழ்ந்த கப்பலாய் ஒன்றிரெண்டு.. இதை விட்டால் என்னை போல் தனிமையை அனுபவிக்கும் ஒரு சிலர்..இவ்வாறு...உணர்ச்சிகளை கொட்டுகிறார்கள்.. சொட்ட சொட்ட நனைகிறேன் நான்..பலர் இதனை புரிந்து கொள்வதில்லை..இல்லை படிக்க முற்படுவதில்லை... இவர்கள் உணர்சிகளை படிக்க படிக்க மூச்சு முட்டுகிறது....

நல்ல வேளை நான் எதிர்பார்த்த அழைப்பும் வந்து விட்டது.. நீந்தி செல்கிறேன் நான்..மக்கள் கூட்டத்தில் என்பார்கள் சிலர்.. இல்லையில்லை.. உணர்ச்சி வெள்ளத்தில்.. என் மனம் வேறெங்கோ அலைபாய கொஞ்சம் கொஞ்சமாய் இந்த வெள்ளம் வற்ற தொடங்கியது.. இப்போது நடக்கிறேன்.. கால்கள் வலிக்கின்றன மறுபடியும்.. உட்கார இடம் தேடவேண்டும் என என் மனம் சொல்கிறது.. காபி குடிக்க வேண்டும் என்று என் கால்கள் சொல்கிறது...இவர்கள் இருவர் பேச்சையும் கேட்க போகிறேன் நான்..