Thursday, June 4, 2015

ஆட்டுக்கு வயசாயிடுச்சு

ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம், ஞாயிற்று கிழமையாக தான் இருக்கும் கண்டிப்பாக. அவ்வளவாக போக்குவரத்து கிராமங்களை இணைக்காத  காலம். சிற்றுந்து என்ற வார்த்தை தமிழில் வடிவமைக்கபடாத நேரம் அது. மோட்டார்சைக்கிள்கள் சாலைகளை ஆக்கிரமிக்காத, மாட்டு வண்டிகள் உயிரோடிருக்கு போராடி கொண்டிருந்த அந்த கடைசி சில வருடங்களில் இதுவும் ஒன்று.ஆடி அசைந்து வரும் அந்த அரசாங்க பேருந்துகளுக்காக மக்கள் காத்து கிடந்த நேரங்கள் அவை.

 43ஈ -17 கடையம் - ஸ்ரீனிவாசா - எவிஆர்எம்வி - கணபதி என அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கால அட்டவணையை மனக்கணக்கில் வைத்துகொண்டு இரு பேருந்து வந்து போகும் இடைவெளியில் கடை தெருவில் துணி எடுக்கவும், கல்யாண வீட்டுக்கு சீர் செய்யவும், துக்க வீட்டுக்கு விசாரிக்க செல்லவும் என்று தங்கள் வீட்டு உறவுகள் தொடர்வதையும், தங்கள் தேவைகளையும்  மக்கள் பூர்த்தி செய்த காலம். 

எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதை விட தாத்தா வீட்டுக்கு போகும் நாள் என்று சொல்லும் அளவில் ஒரு நடைமுறை எங்கள் வீட்டில்.காலை எட்டு மணிக்கு தாத்தா எங்கள் வீட்டில் ஆஜராவது வழக்கம். ஒரு சர்க்கரை இல்லாத காபி அல்லது பால்.ஒரு சின்ன பேச்சு "அப்புறம் கறி எடுக்க வந்தேன். சீக்கிரமா வந்திரு பிள்ளைகள கூட்டிகிட்டு" என்பதுடன் அந்த ஞாயிற்று கிழமை விருந்துக்கு அழைப்பது நிறைவு பெரும்.

ஞாயிற்று கிழமை 10 மணிக்குள் வீட்டில் இருந்து புறப்பாடு. ஒரு அரைமணி நேரமாவது காத்திருப்பு பேருந்துக்காக.. அப்போதெல்லாம் அது ஒரு பெரிய விஷயமல்ல.. இப்போது ஐந்து நிமிடமே யுகங்களாக தோன்றுகிறது..

ஒரு மூன்று கிலோமீட்டர் தாண்டி குளத்தங்கரையில் முதல் நிறுத்தம். அங்கே தான் இறங்குவோம்.ஊர் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். மழை பெய்யும் காலங்களில் குளத்தின் மறுகால் ரோட்டோரோமாக ஓடும். அந்த தெளிந்த நீரில் காலை நனைப்பதில் ஒரு சந்தோசம்.  அதில் அரட்டளை பார்த்தால் இன்னும் ஒரு குதுகலிப்பு. ஒரு பக்கம் குளம் இன்னொரு பக்கம் வயக்காடு,அப்புறம் மத்தியான வெயில் தெரியாத மாதிரி நல்ல காத்து. தாத்தா வீட்டுக்கு போனால் அங்கே சித்தி பிள்ளைகள், தின்பண்டம், ஊஞ்சல், பசு மாடு, கோழிக்கறி இப்படி நேரம் போக ஒரு ஐஞ்சு மணி வாக்கிலே ஊர் திரும்பல்.அன்றும் அப்படித்தான். ஆனால் அன்று மேகம் மப்பும் மந்தாரமுமாய் இருக்கவே அவசர அவசரமாக  பேருந்து பிடிக்க வேண்டும் என்ற எத்தனிப்பு.

மாடசாமி கோவிலுக்குள் நுழைந்து, கோயில் தோட்டம்  வழியாக பழைய பால் பண்ணையை கடந்த போது வரப்பின் இரு பக்கங்களிலும் செம்மறி ஆடுகள் செத்து கிடந்தன. சில எதோ நோய் வாய் பட்டதால் தோல் உரிந்து கொப்பளங்களுடன் படுத்து கிடந்தன.தம்பி கேட்டான் முதல் கேள்வி என்றும் போல்.

 "இந்த ஆடு எல்லாம் ஏனம்மா இப்படி இருக்கது? " 

அவனுக்கு என்ன ஒரு ஆறு வயசிருக்கும். 

"இந்த ஆடுகெல்லாம் வயசாயிடுச்சு.. அதான் செத்து போகுது."இது அம்மாவின் பதில்.

நான் அம்மா முகத்தை பார்கிறேன். எனக்கு தெரியும்  அது பொய் என்று. அவன் தொனதொனப்பு நிற்பதில்லை என்பதனால் இது ஒரு மந்திரம். அவன் கேள்வி மேல் கேள்வி கேட்பவன் ஆயிற்றே என்று 'இந்த பொய் - இந்த பதில்'. ஆனால் அவன் கேள்விகள் என்றும் நிற்பதில்லை.. ஒன்றன் பின் ஒன்றாக வந்து கேள்வி மேல் கேள்வி, பதிலில் இருந்து கேள்வி என நீண்டு கொண்டே போகும்.விடுவானா அவன் இன்று மட்டும்.

ஒரு பத்து அடி தூரம் போயிருப்போம். அங்கே இரண்டு செம்மறி ஆடுகள் சண்டை போட்டு கொண்டிருந்தன.

"இதுங்களுக்கும் அப்போ வயசான செத்துடுமா? " என்ற அடுத்த கேள்வி.. "ஆமா டா.இதுங்களுக்கும் வயசான செத்துடும்"

குளத்தங்ககரையை பிடித்தாயிற்று. ஒன்றிரண்டு தூறல் விழுகிறது. வேகமா நடக்கிறோம்.அப்போது ஒரு தாத்தா ஒரு இருபது ஆடுகளுடன் எங்களை எதிர்த்து நடந்து வருகிறார். ஆடுகள் எங்களை கடக்கின்றன. 

"அப்போ இந்த ஆடு எல்லாம் கூட வயசான செத்துடுமா?" 

அம்மாவுக்கு ஒரு பயம் எங்கே ஆட்டுக்காரர் காதில் கேட்டு விடுமோ என்று. 

"இந்த ஆட்டுகேல்லாம் இன்னும் வயசாகல.. இன்னும் ரொம்ப நாள் உயிரோட தான் இருக்கும்.." ஒரு வழியாய் பதில் சொல்லியாயிற்று.

ஆடுகள் எங்களை கடந்து விட்டன. ஆட்டுக்கார தாத்தா எங்களை பார்த்து சிரிக்கிறார்.

"நல்ல இருக்கியாம்மா? உன் பிள்ளைகளா.. நல்ல இருக்கட்டும்" என்ற அவரை பார்த்து "ஆமாம்" என்று அம்மா சொன்ன நேரம் அந்த கேள்வி வந்தது இவனிடம் இருந்து.

"அப்போ இந்த தாத்தாவுக்கு வயசாயிடுச்சுல்ல.. இவரு எப்போ அம்மா சாவாரு?" 

தூக்கி வாரி போட்டது எனக்கு.. என்ன சொல்ல வென்று அம்மா திகைக்க.. 

"அதுக்கு தான் கண்ணு நானும் காத்து கிட்டு இருக்கேன்.. வந்து தொலைய மாட்டேங்குது. உன் பையன் நல்லா கேள்வி கேக்குறான்" என்று அவர் சிரித்துகொண்டே பதில் சொல்லி போகிறார்.

ஆட்டுக்கு வயசாயிடுச்சு.....

2 comments:

  1. சிற்றுந்து என்ற வார்த்தை தமிழில் வடிவமைக்கபடாத நேரம் //

    ரசிக்கத் தூண்டும் எழுத்தின் வசீகரம்!
    நிஜத்தில் வயசாகி இயற்கையாக சாகும் ஆடும் இருக்கிறதா என்ன?!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      "நிஜத்தில் வயசாகி இயற்கையாக சாகும் ஆடும் இருக்கிறதா என்ன?" உண்மையில் நான் இதை பற்றி யோசித்ததில்லை.. இனி தீவிரமாய் விசாரிக்க போகிறேன். இந்த கேள்விக்கு எனக்கும் பதில் வேண்டும்.

      Delete