Thursday, April 30, 2015

வீட்டுக்கு கூட்டி வந்திரு வேகமா போ அய்யா..

ஓடக்கரை ஓரம் உன் தங்கச்சி மவ நிக்கா
கையில பையுமா கொஞ்சம் வேகமா போ அய்யா
பாவி பய என்ன பேசி மயக்குனானோ பச்சைபிள்ளைய
வீட்டுக்கு கூட்டி வந்திரு வேகமா போ அய்யா..

வேகமா போ தங்கம் வெவகாரமாகும் முன்னே!
நூலுதான் கருப்பு  சேலை மட்டும் செவக்குமாய்யா
பெத்தவ போன திசை பாவி மவளும் திரும்பிருக்கா
வீட்டுக்கு கூட்டி வந்திரு வேகமா போ அய்யா..

பதினஞ்சு ஆயிடுச்சுன்னு பள்ளிக்கூடம் அனுப்பல நான்
படிக்க ஆசபட்ட புள்ள இந்த பாவி மவ பெத்த புள்ள
மொத்தத்தில் நல்ல புள்ள விவரம் தெரியாத புள்ள
வீட்டுக்கு கூட்டி வந்திரு வேகமா போ அய்யா..

கல்யாண வயசிருக்கு கொஞ்சம் பொறு தாயீன்னு
புத்தி மதி கொஞ்சம் சொல்லி காலத்த கழிசிடலாம்
படிக்க இன்னும் வயசு இருக்கு பள்ளிகூடம் அனுப்பிரலாம்
வீட்டுக்கு கூட்டி வந்திரு வேகமா போ அய்யா..

Saturday, April 18, 2015

பனங்கிழங்கும் ஐம்பது ரூபா கடனும்!

"இந்த வருஷம் பெய்த மழைக்கு இன்னும் நாலு ருஷத்துக்கு வெள்ளாமை நல்லா நடக்கும்" என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. ஒரு கட்டு் பனங்கிழங்கை யாரோ வீட்டுக்குள் தூக்கி் எறிந்துவிட்டு வெடு வெடுவென நடந்த அந்த உருவம் வேறு யாருமல்ல வீரபாண்டி தாத்தாதான்...தூரத்து உறவு..ஆனாலும் அடிக்கடி பார்த்திருக்கேன்


"என்னதிது இப்படி தூக்கி எரிஞ்சிட்டு போறிய!" கொஞ்சம் பேச்சு கொடுத்தேன்.. "அட சின்னபிள்ள நீ வீட்ல தான் இருக்கியா.. ரோட்டடி பனமரத்து பனம்பழம் எல்லாம் ஒண்ணு  சேத்து ஒரு காபிக்கு ஆவுமுனு செவகாட்டில் குழி பறிச்சு வச்சேன் அந்த மாட்டிடையான் மவன் எடத்துல... அந்த வெளங்காத பய கம்ப தூக்கிட்டு வந்துட்டான்....எடுனா எடுன்னுட்டான்..ஓரடி ஆழத்துல அழகா தோண்டி வச்சிருந்தேன்..ஒன்னும் வெளையாத பூமிதான் இருந்தாலும் சண்டை போடா பயலுவ இருக்க தான் சேய்யுரான்னுவ  ..அதை தோண்டி எடுத்து திரும்ப சொமந்தேன்... பக்கத்துல உங்க காடுதான்... நல்ல மண்பாங்கான எடம் பார்த்து பொதச்சுபுட்டேன் அன்னைக்கே...அவன் உட்ட சாபமோ உங்க மண்ணு ராசியோ தெரியல கெழங்கு வந்திருக்கு கட்டி கெழங்கா.. அதான் ஒரு கட்டு கெழங்க கொண்டு வந்தேன்..நல்ல இருக்கியா? வேலைக்கு போவலன்னு சொன்னாவ அப்பா..இங்கயே இருந்திரு அப்பாவுக்கும் ஒத்தாசையாய் இருக்கும்..நான் வாறேன்!" என்றபடி கிளம்பினார்..அவ்வளவு கதையே எனக்கு அதிகம் அவருடன்.. அதற்க்கு மேல் பேச ஒன்றுமில்லை ...

எங்கோ சென்று வந்த பாட்டிக்கு பனகிழங்கை பார்த்தவுடன் சந்தோஷம் தாங்கவில்லை.."யாரு வாங்கிட்டு வந்தா? உங்க அப்பனா? நம்ம தோட்டத்தில எப்படி  வெளயும் தெரியுமா அதெல்லாம் ஒரு காலம் இப்போ காசு கொடுத்து வாங்க வேண்டிருக்கு!" என்று பெருமூச்சு விட்டவளிடம்.. வீரபாண்டி தாத்தா கதைய சொன்னவுடன்.. "கெழங்கு என்ன அழகு கெழங்கா இருக்கு... நீ ஒரு அம்பது ரூபா கொடுத்திருக்கலாம்ல..அவருக்கு காபிக்காவது ஆயிருக்கும்..உங்க எடத்துல தண்ணி பாய்க்காம குளத்து மறுகால் விழுந்த தண்ணியில பதினாறு மரக்கால் நெல்லு நட்ட என் சின்ன கொள்ளி உங்க அப்பனுக்கு ஒரு நாழி நெல்லு கண்ணுல காமிக்கல.. இந்த கெழவன் பிழைக்க தெரியாம குடுத்துகிட்டு போறான் பாரு.அடுத்து பாக்கும் போது குடுக்கணும் அம்பது ரூபா கெழவனுக்கு" என்று அவள் சொன்னாள்...

அம்பது ரூபா குடுக்கணும் கெழவனுக்கு!